Wednesday, June 4, 2008

விலங்கு

பக்கத்து வீட்டிற்கு
புதிதாய் வந்திருந்தனர்
அம்மா அப்பா மற்றும்,
அவர் குழந்தைகள் இருவர்.

கட்டில் மெத்தை
அலமாரிகள் மூன்று
இன்ன பிற இதர நாற்காலிகள்
இன்னும் பிரிக்காத
மூட்டை முடிச்சுகள் பல...

எடுத்து வந்தவற்றை
இரவு வரை அடுக்கி வைத்து
கோலமிட்டு பால் காய்ச்சி
குடித்தனம் துவங்கினர்.

மூன்று நாட்கள்
முடிந்தன...

ஆரம்ப குறுகுறு பார்வை
முடிந்து, பார்த்தால்
குறுநகை பூக்கும்
பழக்கம் இப்போது...

மறுநாள் காலை...

வாசல் படியில்
வெள்ளை பூனை ஒன்று....
வழக்கம் போல பால்
திருட வந்ததென,
வேலைக்காரி
விரட்ட கை ஓங்க...
வெறுமையாய்... வேதனையாய்...
தலை சாய்த்து பார்த்தது...

எங்கள் பூனை!
சொந்தம் கொண்டாடினான்
பக்கத்து வீட்டின்
புது சிறுவன்

விசாரித்ததில்...

வயதாகி போனதென
வளர்த்த பூனை இனி
வேண்டாமென வந்திருந்தனர்
வாயில்லா அந்த பிராணியோ,
பழகிய பாசம்
மறக்காமல், தேடி...
வழி கண்டுபிடித்து
பின் வந்திருக்கிறது...

விட்டு விட்டு வந்த
வீட்டு "மனிதர்" உள்ளே...
விடாமல் வந்த
"விலங்கு" வெளியே...

No comments: