Tuesday, April 13, 2010

சொக்கும் வாசம்

அலுவலக பேருந்து
இறக்கி விட்டதும்
வீடு நோக்கி தினமும்
சிறு நடை பயணம்...
கால்கள் வீட்டை
அடைய அவசர எட்டு வைக்க
நாசிகளுக்கோ விருந்து
நடக்கும் வழியெங்கும்...

பூக்கடையில் காத்திருக்கும்
மலர்ந்த மல்லிகை தான்
முதன் முதலில்
என்னை வரவேற்கும்
பக்கத்திலேயே பிள்ளையார்
கோவில்...
பூ பன்னீர்
பிரசாதக் கலவை வாசம்...

தெருவோரம் இருக்கும்
பக்கோடா கடையில்
மாலை பலகாரம் தயாராகிறது...
கொதிக்கும் எண்ணெய்
அதில் பொறியும்
வெங்காய பக்கோடா
வாசமே போதும்
வேறு விளம்பரம் தேவை இல்லை...

அதையும் கடந்து
அப்பாடா.... வீடு வந்து
பூட்டிய கதவை திறந்து
உள்ளே நுழைத்ததும்...
இன்னும் மிச்சமிருக்கும் உன் வாசம்...
சொக்கி தான் போகிறேன்...
தினமும்...
சொக்கி தான் போகிறேன்...