Tuesday, October 6, 2009

பரிணாமம்

நண்பனாக நான்கு வருடங்கள்
நன்கு பழகிய முகம் தான்...
நாயகனான பின் நேர்காண
ஏனோ எனக்கு நாணம்...

பார்வைகள் பரிமாறவே
பலமுறை தயங்கி நான் பரிதவிக்க...
படபடவென்று பேசி சிரித்த
பழைய நாட்களுக்கோ பரிகாசம்

நண்பன் காதலனாய் உருமாறியிருக்க
நெஞ்சுக்குள் என் உணர்வு தடுமாறியிருக்க...
எழுந்தது இந்த குழப்பத்தின் குரல்
எனக்குள் கேள்வி பின் எனக்குள் பதில்...

நிமிர்ந்து பார்த்த நல்நட்பும்
நிலத்தில் கோலமிடும் நம்காதலும்
பெயர் வேறு பெற்றிருந்தாலும்...
நிச்சியமாக... பாசத்தின் பரிமாணங்களே...
நிச்சியமாக... பாசத்தின் பரிணாமங்களே...

Monday, September 21, 2009

தேடுகிறேன்...

மத்தாப்பு வெளிச்சத்திலும்
தெரிய மறுக்கின்றது
சிவகாசி குழந்தைகளின்
சின்ன சிரிப்பு ஒன்று...

Tuesday, June 30, 2009

பாவம்

வாகனத்து புகையும்
வளர்ந்த நகரமும்
வண்ணத்து பூச்சிகளை
விழுங்கி விட்டதை அறியாமல்...
வழியில் சில பூக்கள்
இன்னும்
காத்திருக்கின்றன
பாவம்...

Friday, June 19, 2009

தாயுமானவள்

உடல் சோர்ந்து, மடி மீது
தலை வைத்து நீ உறங்கிய
அந்த நிமிடங்களில்...
இருபத்தியொன்பது வயதான உன் முகத்தில்
ஒரு குழந்தையின் சாயல்...
உணர்ந்தேன்...
உனக்கு தாரம் மட்டுமல்ல நான்...
தாயுமானவள்.

Friday, June 5, 2009

ஏன்?

காதலை விளையாட்டாக்கி
கை விட்டு ஒருத்தி போக
காயத்தை பத்திரப்படுத்தி
கட்டியவளை கஷ்டபடுத்தினான்

காதல் பூப்பது ஒரே முறை எனின்
கடமைக்கு கல்யாணம் பண்ணுவதேன்?
கல்யாண முடிவு, உறுதி இல்லாமல்
கடனுக்கு காதல் மட்டும் கொள்வது தான் ஏன்?

Tuesday, June 2, 2009



பளபளக்கும் தங்க சங்கிலி
புத்தம் புது வடிவில்
பணம் பத்தாயிரம் கொடுத்து வாங்கி
பெருமையுடன் அணிந்து
படியிறங்கி ஒய்யாரமாய் நடக்கையிலே,
பக்கத்து வீட்டு ஏழை பிள்ளை
பால் இல்லாமல் அழ கேட்டு
புது சங்கிலி அழுத்தியது
ஏனோ...
தங்கம் கனம் ஏறியது

Thursday, May 21, 2009


உனக்காக
வழிந்த கண்ணீர்
வாய்க்கால் வழி ஓடியிருந்தால்
விளைச்சலாவது பெருகியிருக்கும்

Sunday, May 17, 2009

The Pain of Love...

The Pain of Love is the best punishment for the worst enemy
Death, may be... to lesser foes

Monday, May 4, 2009

சங்கமம்

கடலிலே கலந்த பின்
கங்கை என்ன காவேரி என்ன?
காதலிலே விழுந்த பின்
இந்து என்ன இசுலாமியன் என்ன?

Tuesday, April 21, 2009

என்ன அநியாயம்!

நியாயமாக
நீ வரும் நாளே
பௌர்ணமி என்றிருக்க வேண்டும்
நிலா வரும் நாளை
பௌர்ணமி என்கின்றனரே?

Thursday, April 9, 2009

அழகி

அள்ளி அவசரமாக
முடிந்த ஈர கூந்தல்
அகல குங்கும பொட்டு,
மஞ்சள் தங்கிய முகம்
மங்களம் பொங்கும் முகம் ...

'வயது அறுபதானாலும், இன்றும்
என் பெண்டாட்டி - அழகு தான்,
வடிவு, ரொம்ப வனப்பு தான்'
தாத்தா சிரிக்க பாட்டி
வெட்கத்தில் இன்னும் சிவந்து போவாள்

பேரபிள்ளைகள் நாங்கள் அனைவரும்
பாட்டி கையால் நிலாச்சோறு , பின்
படுக்க போகும் முன் கதைகள் கேட்டு
படுத்த பின்னரும் ஓயாமல், உறங்கி
போகும் வரை பேச்சு என்றிருப்போம்

அது ஒரு காலம்...

படிப்பிற்காக பட்டணம் வந்து
பின் வேலை குடும்பம்
பிள்ளை பொறுப்பு என்று
பல வருடம் கடந்து விட்டது

இன்று...

பங்காளி தகராறில் சொத்துக்கள்
பிரிக்கப்பட்டு எங்களுகென்று எழுதிய
பங்கு வாழைத்தோப்பினை ஒத்துக்கொள்ள
பிறந்த ஊருக்கு அப்பாவுடன் திரும்பினேன்

வெகு நாள் கழித்து...
சொந்த ஊர்...

மாற்றங்கள் பல...
வயல் வெளி சுருங்கி
வீடுகள் பெருகி...
பசுமை குறைந்து
பட்டணத்தின் அடையாளங்கள்...

வீட்டை நெருங்க...
நெஞ்சினில் நினைவுகளின் பெருக்கெடுப்பு...
நம் வீடும் மாறி இருக்குமோ
உறவுகளும் மறந்து போயிருக்குமோ
உள்ளுக்குள் குறுகுறுப்பு...

மாறி தான் போய் இருந்தது...
முன்பு தெருவிலேயே பெரிய வீடு
சுற்றிலும் பெரிய வீடுகள் வந்தவுடன் - இன்று
சற்று சிறியதாக தெரிந்தது

வாசலில் வரவேற்ற துளசி
வாடி போய் இருந்தது...
வேப்ப மரத்தினையும்
வெட்டி விட்டார்கள் போல... காணோம்...

பழைய பொலிவு இல்லை...
வாசல் படியில்... என் பாட்டி...

பொக்கை வாய் ...
பார்வையிலும் கோளாறு போல
பார்த்தது கண்ணை சுருக்கி தான்
நரை நிறைந்து போன தலை
நடையிலும் சிறு தள்ளாட்டம்...

ஆயினும் , எங்களை பார்த்தும்
அப்படி ஒரு சிரிப்பு
அவ்வளவு சந்தோசம் முகத்தில்
அருகே அழைத்து அமர்த்தி
ஆசையாய் கன்னம் தடவி
அணைத்து , உச்சி முகர்ந்தாள் ...

மாறிவிட வில்லை...

பாசம் பொங்கும் என் பாட்டி ,
பழதானாலும் வயதானாலும்
இன்றும் அழகு தான்...
இன்னும் அழகு தான்...

Sunday, April 5, 2009

கலி காலம்

சட்டம் தட்டி கேட்காத கயவரை
சாமி தண்டிக்கும் என மனதுக்கு
சமாதானம் தேடி கோவிலுக்கு போனால்
சிலையை காணோம், கடத்தி விட்டார்கள் என்ற
புலம்பலில் பூசாரி...

Tuesday, March 24, 2009

தோழிக்கு நன்றி

கடலொத்த கருத்து கற்பனை
குவிந்து இருக்க, காத்துகிடக்க
காதலில் மட்டும் களித்திருந்தேன்
கனவில் குடி இருந்தேன்

காதல் என்பது அற்புதம் தான்
ஆழ்கடல் அரிய முத்து தான்
சிப்பிக்குள் சிலிர்க்கும் முத்தாகினும்
கடலின் சிறு தேக்கம் அன்றோ?

உணர்த்திய தோழிக்கு நன்றி...

குறிக்கோள்

வெள்ளை முயல் ஒன்று
விளையாடும் வேளையிலே
வெறி கொண்ட ஓநாய் பார்த்துவிட
விரட்டி வந்தது பின்னாலே

பார்ப்பதற்கு சிறு முயல் எனினும்
பார்த்து முடிப்பதற்குள்
புதர் பள்ளம் புல் பாதைகளில்
பறப்பது போல கடந்து சென்றது

விரட்டி வந்த ஓநாயோ
வெள்ளை முயலை பிடிக்க முடியாமல்
அது மறைந்த திசையை
ஏமாற்றத்துடன் பார்த்து நின்றது

உயரத்தில் உட்கார்ந்து பார்த்த குரங்கு
உருவத்தில் பெரியவன் தான்
உறுமலும் பலே தான்
முயலை மட்டும் தான் பிடிக்க
முடியவில்லை போல
என கேலி பேசியது
திரும்பிய ஓநாய்
உண்மை உரைத்தது...

உயிர் காக்கும் குறிக்கோளுடன்
ஓடும் முயல் அது, வெறும்
ஒரு வேளை உணவுக்காக
ஓடும் நான்,
எப்படி வெல்ல முடியும் ?

Tuesday, March 17, 2009

முட்டாள் உதடுகள்

கவலை கொள்ள
கண்ணீர் சொரிய
காரணமாயிரம் கண்டுபிடிக்கின்றன
கண்கள் இரண்டும்


புன்னகைக்க
காரணம் ஒன்று கூட
கிடைக்கவில்லையா
உதடுகளே உங்களுக்கு ?

Friday, March 13, 2009

முதல் மழை

அன்றொரு நாள்... நல்ல மழை...
கடலலையில் கால் நனைத்து
ஈரம் காயும் முன்
கொட்டும் மழையில் நனைந்து
குளிரில் நடுங்கி...
சிரித்து... சிவந்தோம்...


அன்றொரு நாள்... நல்ல மழை...
மழை நிற்கும் வரை பேசலாம்
என்று முடிவெடுத்து...
மனம் முழுக்க மழை நின்றுவிடகூடாதே
என்ற பரிதவிப்பினால்
மௌனமாய் மேகத்திடம் வேண்டி நின்றோம்...


அன்றொரு நாள்... நல்ல மழை...
மழைக்கு ஓரமாய் ஒதுங்கி
துளிகளை ரசித்து...
கதைகள் பேசி...
பழைய வருத்தங்களை புதுப்பித்து
புதிய சண்டைகளை துவக்கினோம்...


அன்றொரு நாள்... நல்ல மழை...
தனியே விடுதியில் தங்கி
தவித்து கொண்டிருந்தவளை
தேற்ற நடுநிசியில்
கொட்டும் மழையில்
குடை எடுக்காமல் வந்தாய் நீ...


அன்றொரு நாள்... நல்ல மழை...
அலுவலக பணி முடிக்க
நள்ளிரவாக, நடுவே தூக்கம் விரட்ட
மழைக்கு இதமாக... காபி குடித்தபடியே
முதன் முதல் மறுநாளை
மழைத்துளிகளின் நடுவே ஒன்றாக வரவேற்றோம்...


இன்றும்... முதல் மழை...


It rained that day…
Wet, we were with waves and sea
Even before we could be dry
With rain, we became more wet
Adding to our smiles and shy…

It rained that day…
After deciding to talk until it rains
We spent the time in silence
For, we were both busy praying
That the rain never stopped…

It rained that day…
I was alone away from home
In the dark night and thru the darker rain
You came to console me…
Forgetting your umbrella…

It rained that day…
Taking the lonely shelter
We started talking about our rains…
Old arguments we renewed
Fight we started a new…

It rained that day…
Assignments at office to be completed
Awake we were until midnight
Welcomed the morrow we both
With hot coffee and our warm love between us…

It rained today…

Monday, March 2, 2009

எதிர்பார்ப்பின்
எதிரொலி...
ஏமாற்றம்!!

Saturday, February 14, 2009

My Jaan... You Make My Day

The grey begins to fade as sky begins to blue
I pray to god that my eyes open only to see you...

The sun climbs higher to glaze with hues of orange, red
I hope for the evening together and look to it ahead...

The evening floats in on the purest hope of a spring
I wish I had fast feet or could sprout faster wings...

As the day is carried into the mystical twilight
Your presence fills with me with a satiety delight...

In the quiet, As I listen for the last silence of the day
I wait in the moonlight if your dreams come in my way...

You... Make my day…
My dearest, You Make My Day!!

Saturday, January 17, 2009

தேடலில் தொலைத்தவை... காதலில் இழந்தவை...

படுத்தவுடன் உறக்கம்
பசித்தபின் உணவு
கண்ணீர் கறையறியா
படுக்கை தலையணை


வளையாத கவுரவம்
விலையில்லாத குழந்தைமனம்
உதட்டில் முற்றுபெறா
குதூகல சிரிப்பு


பெற்றோரின் நம்பிக்கை
நண்பர்களின் ஆதரவு
முகம் தெரியா அந்த
நால்வரிடம் நன்மதிப்பு


தேடலில் தெளிவது ஞானம்
தேடலில் தொலைவது காதல்...

Friday, January 16, 2009

உன்
இதய சிறையில்
இறுதிவரை இருக்க விரும்பும்
விடுதலை வெறுத்த கைதி நான்...

Thursday, January 15, 2009

புரியவில்லையா?

வேர் விட்டு வளர்ந்த பின்
வேறொரு இடத்தில் வளராது
மண் கொண்ட பயிர் மட்டுமல்ல - உன் மீது
நான் கொண்ட உயிர்கூடத்தான்

Wednesday, January 14, 2009

காத்தாடி கனவுகள்

பெண்ணின்
கனவுகள் கூட
காத்தாடி போல தானோ?
பெற்றோரின்
கை விரல் அனுமதிக்கும் அளவே
உயரம் தொட முடியுமோ?