Tuesday, September 27, 2011

ஐந்திலக்க சம்பளம்
ஆண்டுக்கு இரு முறை போனஸ்
மேலாளர் பதவி
இன்னும் சில சலுகைகள்
இருந்தாலும்,
இவையாவும் ஈடாவதில்லை
என்னை வழியனுப்புகையில்
உன் கண்களில் வழியும் சோகத்திற்கு...

Wednesday, September 14, 2011

Because I showed often
My Love lost its value
Because I cried often
My tears lost their value
Because I wrote often
My words lost their value
Now, because it hurts often
My pain lost its value
Thus I have lost often
But, the loss still has not lost its value.

Monday, August 8, 2011

அலுவலகம் போகும்
காலை அவசரத்தை
புரிய வைக்க முடிவதில்லை
அப்பொழுது தான்
முலைமயங்கி கிடக்கும் என்
ஆறு மாத பிள்ளைக்கு

Thursday, July 28, 2011

பூர்வ ஜென்மத்தில்
கொடும்பாவம் செய்தோரும்
தவ யோகியின் கோவத்தால்
கடுஞ்சாபம் பெற்றோரும்
இந்த ஜென்மத்தில் பிறப்பர்...
வேலைக்கு போகும் தாயாக.

Sunday, May 8, 2011

இரவிடம் வேண்டுதல்

இளமை வேண்டுவது
நல்ல கனவு
முதுமை வேண்டுவது
நாலு மணி நேர உறக்கம்.

Monday, May 2, 2011

தங்க மகன்

ஆசை மகன் அவனோடு
அயல்நாடு செல்ல
அனுமதி இல்லை,
அரசாங்கம் அறிவித்தது.
ஐந்து கிலோ வரையில்
தான் தங்கம்
எடுத்து செல்லலாமாம்...
அவன், ஆறு கிலோ. :-)

Wednesday, April 27, 2011

மகனே...

அந்நாளில்...
வயிற்றில் இருக்கும் போது உதைத்தாய்
வலிக்கவில்லை, பூரித்தேன்...

பின்னாளில்...
விளையாட்டில் பிஞ்சு பாதங்களால் உதைத்தாய்
வலிக்கவில்லை, சேர்ந்து சிரித்தேன்...

இந்நாளில்...
வயதாகி விட்டதால் வேண்டாமென உதைக்கிறாய்
ஏனோ தெரியவில்லை... வலிக்கின்றது.

Tuesday, April 26, 2011

ஆனையும் குதிரையுமாகி
சவாரிக்கு காத்து இருக்கின்றன
மாமனின் முதுகும்
தாத்தனின் தோள்களும்...
பால்குடி மடியை விட்டு
இறங்கத்தான் ,
இன்னும் மனமில்லை
எங்கள் ராஜகுமாரானுக்கு

மூன்று மாதங்கள் :-)

Wednesday, April 20, 2011

பணக்கார பிச்சை

ஆயிரங்களை அள்ளி குவிக்கும்
அவசரத்தில் அப்பா அம்மா
அலுவலகம் சென்றபின்னர்...
ஆயாவிடம் பிச்சை எடுக்கிறது பிள்ளை
அன்பிற்காக...

Monday, March 28, 2011

வேண்டுமே

இன்னும் இரு கண்கள் வேண்டும்
இருக்கும் கண்கள் இமைக்கும் போதும்
உன்னை காண...
இன்னும் இரு கண்கள் வேண்டும் எனக்கு

இனிக்கிறதே!

என் பெயரில்
இத்தனை இனிமையா!!
வியக்கிறேன்...
ஒவ்வொருமுறையும்
உன் உதடுகள்
உச்சரிக்கும்போது..