Tuesday, April 13, 2010

சொக்கும் வாசம்

அலுவலக பேருந்து
இறக்கி விட்டதும்
வீடு நோக்கி தினமும்
சிறு நடை பயணம்...
கால்கள் வீட்டை
அடைய அவசர எட்டு வைக்க
நாசிகளுக்கோ விருந்து
நடக்கும் வழியெங்கும்...

பூக்கடையில் காத்திருக்கும்
மலர்ந்த மல்லிகை தான்
முதன் முதலில்
என்னை வரவேற்கும்
பக்கத்திலேயே பிள்ளையார்
கோவில்...
பூ பன்னீர்
பிரசாதக் கலவை வாசம்...

தெருவோரம் இருக்கும்
பக்கோடா கடையில்
மாலை பலகாரம் தயாராகிறது...
கொதிக்கும் எண்ணெய்
அதில் பொறியும்
வெங்காய பக்கோடா
வாசமே போதும்
வேறு விளம்பரம் தேவை இல்லை...

அதையும் கடந்து
அப்பாடா.... வீடு வந்து
பூட்டிய கதவை திறந்து
உள்ளே நுழைத்ததும்...
இன்னும் மிச்சமிருக்கும் உன் வாசம்...
சொக்கி தான் போகிறேன்...
தினமும்...
சொக்கி தான் போகிறேன்...

Thursday, March 25, 2010

சின்ன சின்ன உணர்வுகள்

சில முகங்களில் கோவம்
பல முகங்களில் கண்ணீர்
சில முகங்களில் ஏக்கம்
சில, ஏமாற்றம்
இருந்தும்...
அனைத்தும் அழகு
அள்ளி கொள்ளும் அழகு
ஆரம்ப பள்ளி வாசலில்
பெற்றோரை பிரியும் குழந்தைகள்

Tuesday, October 6, 2009

பரிணாமம்

நண்பனாக நான்கு வருடங்கள்
நன்கு பழகிய முகம் தான்...
நாயகனான பின் நேர்காண
ஏனோ எனக்கு நாணம்...

பார்வைகள் பரிமாறவே
பலமுறை தயங்கி நான் பரிதவிக்க...
படபடவென்று பேசி சிரித்த
பழைய நாட்களுக்கோ பரிகாசம்

நண்பன் காதலனாய் உருமாறியிருக்க
நெஞ்சுக்குள் என் உணர்வு தடுமாறியிருக்க...
எழுந்தது இந்த குழப்பத்தின் குரல்
எனக்குள் கேள்வி பின் எனக்குள் பதில்...

நிமிர்ந்து பார்த்த நல்நட்பும்
நிலத்தில் கோலமிடும் நம்காதலும்
பெயர் வேறு பெற்றிருந்தாலும்...
நிச்சியமாக... பாசத்தின் பரிமாணங்களே...
நிச்சியமாக... பாசத்தின் பரிணாமங்களே...

Monday, September 21, 2009

தேடுகிறேன்...

மத்தாப்பு வெளிச்சத்திலும்
தெரிய மறுக்கின்றது
சிவகாசி குழந்தைகளின்
சின்ன சிரிப்பு ஒன்று...

Tuesday, June 30, 2009

பாவம்

வாகனத்து புகையும்
வளர்ந்த நகரமும்
வண்ணத்து பூச்சிகளை
விழுங்கி விட்டதை அறியாமல்...
வழியில் சில பூக்கள்
இன்னும்
காத்திருக்கின்றன
பாவம்...

Friday, June 19, 2009

தாயுமானவள்

உடல் சோர்ந்து, மடி மீது
தலை வைத்து நீ உறங்கிய
அந்த நிமிடங்களில்...
இருபத்தியொன்பது வயதான உன் முகத்தில்
ஒரு குழந்தையின் சாயல்...
உணர்ந்தேன்...
உனக்கு தாரம் மட்டுமல்ல நான்...
தாயுமானவள்.

Friday, June 5, 2009

ஏன்?

காதலை விளையாட்டாக்கி
கை விட்டு ஒருத்தி போக
காயத்தை பத்திரப்படுத்தி
கட்டியவளை கஷ்டபடுத்தினான்

காதல் பூப்பது ஒரே முறை எனின்
கடமைக்கு கல்யாணம் பண்ணுவதேன்?
கல்யாண முடிவு, உறுதி இல்லாமல்
கடனுக்கு காதல் மட்டும் கொள்வது தான் ஏன்?