Tuesday, June 24, 2008

சுறுசுறுப்பின் சாட்சி

ஒட்டடை குச்சியில்
வலை பின்னி முடித்தது
சிலந்தி!

Monday, June 23, 2008

வேலைக்கு போன தாய்

இரு வினாடிக்கும்
இடையே இருக்கும்
அந்த சிறு மணி துளியும்
அவளுக்கு அவன் நினைவு...

பால் மறக்கா செல்வத்தை
ஆயாவிடம் விட்டு விட்டு
பணம் சம்பாதிக்க
அலுவலகத்தில் அம்மா.

Friday, June 20, 2008

அட...

மழையில் நனைந்து
வெயிலில் உலர்கிறது
வானவில்!!

Thursday, June 19, 2008

என்ன செய்ய?

கனவிலாவது கலந்து
இருக்கலாமேனில்...
உறக்கமும் ஒத்துழைக்க
மறுக்கிறதே!

Tuesday, June 17, 2008

பார்வை

கொட்டிய காப்பியும்
கோலமாய் தெரிந்தது
தட்டி விட்டது...
நடை பழகும் மகள்!!

Monday, June 16, 2008

:-)

I am in zero but not in a hundred
I am in dough but not in the baker’s bread
I am in you but not in me
I am not in blue as you can see
I am in moon but not in night
I am now in hideout… find me if you might

I am the alphabet O :-)

ஒரு அறை வீடு ஆனது

காலை கடந்தும் சுருட்டாத பாய் - அதன்
காலடியில், கலைந்த
கோலத்தில், நேற்றிரவு
குளிர் காத்த கம்பிளி

மூன்று வாரமாய்
துடைப்பம் மறந்த தரை
முந்தா நாள் சாப்பிட்ட
மிச்சதுடன் எச்சில் தட்டு

துவைத்த வெள்ளை சட்டையும்
களைந்த கருப்பு சட்டையும்
ஒன்றாய் ஒற்றுமையாய்
கொடி ஓரத்தில் கசங்கியபடி...

பிரம்மச்சாரி அறையின்
அடையாளங்கள்...
அறையுடன் அனைத்தும்
காணமல் போனது

என் கை தாலிக்குரியவள்
எனக்குரியவள் ஆனபின்
என் மெட்டிக்குரியவள்
வீடு வந்தபின்...

Sunday, June 15, 2008

அப்பா

அழுக்கடைந்த பழுப்பு கைலி
அதற்கொவ்வாத அரை கை சட்டை
ஆகாய பார்வை
அலட்சிய நடை

அவன் பின்னால்
நேற்று நடை பழகிய
கோழி குஞ்சுகளாய்
குழந்தைகள் இரண்டு

அவன் சாலையை கடந்தான்
பிஞ்சு கால்களுடன்
தள்ளாடும் நடையுடன்
குழந்தைகளும் பின் நடந்தன

வண்டி வரும் சத்தம்...

விருட்டென்று திரும்பி
வேகமாய் நடந்து
குழந்தைகளை அணைத்தான்
தன் முரட்டு கைகளால்

இருவரையும் தூக்கி
இடுப்பில் வைத்து
சாலையை கடந்த பின்
இறக்கி விட்டான், நடக்க விட்டான்

அழுக்கான கைலி தான்
ஆயினும்... அப்பா....

Friday, June 13, 2008

சொல்ல மறந்த நன்றி...

தயங்கி நின்ற பொழுதெல்லாம்
தன்னம்பிக்கை அளித்த உன் குரலுக்கு...
தடுக்கி விழுந்த பொழுதெல்லாம்
தாங்கி பிடித்த உன் உறுதிக்கு...
கலங்கி இருந்த பொழுதெல்லாம்
கண்ணீர் துடைத்த உன் விரலுக்கு...
கண் மூடி உறங்கிய பொழுதெல்லாம்
சுகமாய் வருடிய உன் நினைவிற்கு...

Thursday, June 12, 2008

Everyday...
Begins with a prayer for your presence
and...
Ends with a whimper for your absence.

Thursday, June 5, 2008

பழைய நாட்கள்

அலுவலகம் முடிந்து
ஆறரை மணி
அரசு பேருந்தில்
அரைபட்டு வீடு வந்து
அக்கடாவென...
ஆசுவாச படுத்திக்கொள்ள
நாற்காலி தேடி...
முடிக்கவில்லை...

நான்கு மணிக்கே
பள்ளி விட்டு வந்து
காத்திருந்த ஆசை மகன்
கட்டி கொண்டான்...
"அம்மா... எனக்கு முதல் பரிசு!! "
தான் வரைந்த ஓவியத்தை
குதூகலத்தோடு...
கண் விரித்து காட்டினான்...

ஒரு கிராமத்து திருவிழா.
என் மகன் கை வண்ணம்
உட்கார நினைத்தவள்...
உற்று பார்க்கவே
கவனம் சிதறி
தவறி உள்ளே விழுந்தேன்
உள்ளே...
உள்ளே...

பளபளக்கும் புது
பச்சை பாவாடை...
தரையை விட்டு
தள்ளி பறக்கும் கால்கள்...
கையில் கட்டியிருக்கும்
இனிப்பு கடிகாரம்
உதட்டில் ஒட்டியிருக்கும்
மிச்ச பஞ்சு மிட்டாய்...

எங்கேயோ பார்த்த முகம்?
யார் அது?
பல வருடம் முன்...
இருந்த என்னை போலவே?
அட!
நான் தான் அது...
பச்சை பாவாடையில்
நானே தான் அது!

சுற்றி பார்க்கிறேன்
திரும்பி பார்க்கிறேன்...
என் கிராமத்து திருவிழா...

வருவோரை வரவேற்கும்
வாழை மர தோரணம்...
வந்தோரை வாழவைக்கும்
விசாலாட்சி அம்மன் கோவில்...
வாசலில் பொங்கல் பானை
வழிஎங்கும் புதுநெய் வாசனை...
வளையல் செட்டியார் முன்
வரிசையாய் என் தோழிகள்...

கடந்து போகிறேன்...
இன்னும் பார்க்கிறேன்...

உயரம் குறைச்சலானாலும்
உற்சாகம் குறைக்காத ராட்டினம்...
ஒரு ஓரமாக நடக்கும்
ஒய்யார சேவல் சண்டை...
பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கும்
தீபாவளி கழிந்து
புகுந்த வீடு போன
பக்கத்து வீட்டு அக்கா...

எங்கேயோ எப்போதோ
மறந்து போன...
வயிற்று போராட்டத்தில்
தொலைந்து போன...
ஆறரை மணி கூட்டத்தில்
அமிழ்ந்து போன...
பழைய நாட்கள்...
பொக்கிஷங்கள்...

"பிடித்திருககா ?" - மகனின் கேள்வி
"ம்ம்ம்ம்... ரொம்ப"




Wednesday, June 4, 2008

விலங்கு

பக்கத்து வீட்டிற்கு
புதிதாய் வந்திருந்தனர்
அம்மா அப்பா மற்றும்,
அவர் குழந்தைகள் இருவர்.

கட்டில் மெத்தை
அலமாரிகள் மூன்று
இன்ன பிற இதர நாற்காலிகள்
இன்னும் பிரிக்காத
மூட்டை முடிச்சுகள் பல...

எடுத்து வந்தவற்றை
இரவு வரை அடுக்கி வைத்து
கோலமிட்டு பால் காய்ச்சி
குடித்தனம் துவங்கினர்.

மூன்று நாட்கள்
முடிந்தன...

ஆரம்ப குறுகுறு பார்வை
முடிந்து, பார்த்தால்
குறுநகை பூக்கும்
பழக்கம் இப்போது...

மறுநாள் காலை...

வாசல் படியில்
வெள்ளை பூனை ஒன்று....
வழக்கம் போல பால்
திருட வந்ததென,
வேலைக்காரி
விரட்ட கை ஓங்க...
வெறுமையாய்... வேதனையாய்...
தலை சாய்த்து பார்த்தது...

எங்கள் பூனை!
சொந்தம் கொண்டாடினான்
பக்கத்து வீட்டின்
புது சிறுவன்

விசாரித்ததில்...

வயதாகி போனதென
வளர்த்த பூனை இனி
வேண்டாமென வந்திருந்தனர்
வாயில்லா அந்த பிராணியோ,
பழகிய பாசம்
மறக்காமல், தேடி...
வழி கண்டுபிடித்து
பின் வந்திருக்கிறது...

விட்டு விட்டு வந்த
வீட்டு "மனிதர்" உள்ளே...
விடாமல் வந்த
"விலங்கு" வெளியே...