Thursday, June 5, 2008

பழைய நாட்கள்

அலுவலகம் முடிந்து
ஆறரை மணி
அரசு பேருந்தில்
அரைபட்டு வீடு வந்து
அக்கடாவென...
ஆசுவாச படுத்திக்கொள்ள
நாற்காலி தேடி...
முடிக்கவில்லை...

நான்கு மணிக்கே
பள்ளி விட்டு வந்து
காத்திருந்த ஆசை மகன்
கட்டி கொண்டான்...
"அம்மா... எனக்கு முதல் பரிசு!! "
தான் வரைந்த ஓவியத்தை
குதூகலத்தோடு...
கண் விரித்து காட்டினான்...

ஒரு கிராமத்து திருவிழா.
என் மகன் கை வண்ணம்
உட்கார நினைத்தவள்...
உற்று பார்க்கவே
கவனம் சிதறி
தவறி உள்ளே விழுந்தேன்
உள்ளே...
உள்ளே...

பளபளக்கும் புது
பச்சை பாவாடை...
தரையை விட்டு
தள்ளி பறக்கும் கால்கள்...
கையில் கட்டியிருக்கும்
இனிப்பு கடிகாரம்
உதட்டில் ஒட்டியிருக்கும்
மிச்ச பஞ்சு மிட்டாய்...

எங்கேயோ பார்த்த முகம்?
யார் அது?
பல வருடம் முன்...
இருந்த என்னை போலவே?
அட!
நான் தான் அது...
பச்சை பாவாடையில்
நானே தான் அது!

சுற்றி பார்க்கிறேன்
திரும்பி பார்க்கிறேன்...
என் கிராமத்து திருவிழா...

வருவோரை வரவேற்கும்
வாழை மர தோரணம்...
வந்தோரை வாழவைக்கும்
விசாலாட்சி அம்மன் கோவில்...
வாசலில் பொங்கல் பானை
வழிஎங்கும் புதுநெய் வாசனை...
வளையல் செட்டியார் முன்
வரிசையாய் என் தோழிகள்...

கடந்து போகிறேன்...
இன்னும் பார்க்கிறேன்...

உயரம் குறைச்சலானாலும்
உற்சாகம் குறைக்காத ராட்டினம்...
ஒரு ஓரமாக நடக்கும்
ஒய்யார சேவல் சண்டை...
பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கும்
தீபாவளி கழிந்து
புகுந்த வீடு போன
பக்கத்து வீட்டு அக்கா...

எங்கேயோ எப்போதோ
மறந்து போன...
வயிற்று போராட்டத்தில்
தொலைந்து போன...
ஆறரை மணி கூட்டத்தில்
அமிழ்ந்து போன...
பழைய நாட்கள்...
பொக்கிஷங்கள்...

"பிடித்திருககா ?" - மகனின் கேள்வி
"ம்ம்ம்ம்... ரொம்ப"




No comments: